Tuesday 11 September 2018

கிரிக்கெட்டும் நானும்!

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.  

Image credits to its owner only


இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை. 

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!

No comments :

Post a Comment

Ads

My Blog List