Monday 3 September 2018

சிகரம் பாரதி | 02.09.2018

இந்த வாழ்க்கை மிக அற்புதமானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நொடிக்கு நொடி ஆச்சரியங்களை அள்ளி வழங்கும் அற்புதம் இந்த வாழ்க்கை. நாம் என்னதான் நா தனியா இருந்துக்கறேன் என்று சொன்னாலும் நம்மை அறியாமல் நாம் யாரையாவது சார்ந்து தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் தனித்து வாழ்தல் என்பது சாத்தியமேயில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளும் என்பது போல் தான் அறைக் கதவை கதவை அடைத்துக் கொண்டால் இந்த உலகத்தில் நாம் தனியாக இருக்கிறோம் என்பதும். 

மறுபிறப்பு இருக்கிறதா, சாத்தியமா என்னும் கேள்விகளெல்லாம் அவசியமற்றவை. ஏனெனில் அதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே இருக்கும் இந்த பிறப்பில் என்ன செய்ய முடியுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது மறுஜென்மத்தின் மீது நம்பிக்கை வைப்பதைப் போன்று நிச்சயமற்றது. எனவே உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள் இன்றே, இப்போதே! 



சனிக்கிழமை 01.09.2018 அன்று என் மனைவி திலகவதிக்கு பிறந்த நாள். இருபத்தெட்டு வயதாகிறது. என்னை விட மூன்று மாதம் மூத்தவர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் கிருத்திகா செல்வி என்னும் பெண் குழந்தை. திருமணத்திற்குப் பிறகு மூன்றாவது பிறந்த தினம். அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நிறைவு செய்து விட்டோம். கையைக் கடிக்கும் பொருளாதார மந்த நிலை ஒரு காரணம். மனைவி வீட்டில் இருந்து வந்துட்டுப் போங்க என்று அழைப்பு வந்தது. இப்போது நாங்கள் எனது ஊரில் வசிப்பதாலும் ஒரு மணி நேர பயணம் தான் என்பதாலும் சென்று வந்தோம். 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வகையில் வெறியன் என்று கூட வைத்துக் கொள்ளலாம். கடந்த வருட பிக் பாஸில் ஓவியாவை மிகவும் பிடிக்கும். இந்த முறை ரித்விகா தான். பிக் பாஸ் வீட்டின் ஒலிபெருக்கியான டேனியல் இன்று வெளியேறி விட்டார். மகிழ்ச்சி. அடுத்து மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் வரிசையாக வெளியேற வேண்டும். மக்கள் தீர்ப்பும் பிக் பாஸின் எண்ணமும் எப்படி இருக்கிறதோ யாரறிவார்?

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியம். பன்னிரண்டு வயதில் இருந்தே என்னை அறியாமல் இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். வெற்றியை நோக்கிய இந்தப் பயணத்தில் கற்றதும் பெற்றதும் இழந்ததும் ஏராளம். ஒருமுறை இலங்கையின் பிரபல நாளிதழான வீரகேசரிக்கு உப ஆசிரியர் (Sub Editor) பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. எனக்கு அந்தப் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான் என்றாலும் என் சோம்பேறித்தனத்தினால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தேன். இப்போதும் கூட நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டதற்காக மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறேன். என் ஆர்வத்துக்கு மதிப்பளித்து எனக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தால் இன்று என் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்திருக்கும். கடந்து போன பேரூந்துக்குக் கை காட்டுவதில் என்ன பயன்?

மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஒவ்வொன்றாக உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 'சிகரம் பாரதி' வலைத்தளம் எனது தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் தாங்கி உங்களை நாடி வரும். கல்யாண வைபோகம் மற்றும் ஞாபகங்கள் என இரு தொடர் கதைகள் சிகரம் இணையத்தளத்தின் மூலம் வெளியிடவுள்ளேன். எனது பதினைந்தாவது வயதில் எழுதிய தொடர் கதை தான் ஞாபகங்கள். கல்யாண வைபோகம் இருபத்தாறு வயதில் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர். இடைநிறுத்தப்பட்ட தொடர் மீண்டும் வரவிருக்கிறது. சந்திப்போம், சிந்திப்போம் தோழர்களே!

#சிகரம்பாரதி #எண்ணங்கள் #பகிர்வு #மனம் #வலைத்தளம் #சிகரம் 

No comments :

Post a Comment

Ads

My Blog List