Thursday 25 October 2018

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 04

அன்பு நண்பன் உடன்பிறவா சகோதரன் வெற்றிவேலுக்கு வணக்கங்கள் பல! 

நலம், நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மற்றுமோர் கடிதம். உன் குடும்பத்தில் எல்லோரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும். 

உன் ஊடகப் பயணம் எப்படி இருக்கிறது? பெங்களூரு வேலைக்கும் விகடனின் பணிக்குமான வித்தியாசம் பிடித்திருக்கிறதா? பெங்களூருவில் இருந்து பிரிந்திருப்பதாக நினைப்பது எது? விகடன் உனக்குப் பிடித்தமான அனுபவங்களைத் தரலாம். விரைவில் உன் அடுத்த படைப்பு விகடன் பிரசுரத்தில் வெளியாக வேண்டும். 



வாழ்க்கை விசித்திரமானது. இன்று நாம் சரியெனக் கருதி எடுக்கும் முடிவுகள் நாளை எதிர்பார்த்த விளைவுகளைத் தருவதில்லை. எங்கோ ஆரம்பித்து கடைசியில் வேறெங்கோ போய் நிற்கிறோம். ஒரு நிமிடம் நின்று நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் இத்தனை நாளாக நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்கிற கேள்வி மட்டுமே எஞ்சுகிறது. மறுபடியும் பதிலைத் தேடி ஓடுகிறோம். 

என்னைப் பொறுத்தவரை நான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது என்னுடைய வாழ்க்கை இல்லை அல்லது இது எனக்கான வாழ்க்கை இல்லை என்றே சொல்வேன். ஆனால் சமரசங்களால் ஆன வாழ்க்கையை ஒப்புக்கொண்ட பிறகு அதிலிருந்து பின்வாங்குவது உலக நியாயங்களுக்கு அப்பாற்பட்டதல்லவா? 

நமக்கென்று ஓர் இலக்கு இருக்கிறது. ஒரு இலட்சியம் இருக்கிறது. ஆனால் அதை நோக்கி ஓட முடியவில்லையே? யாரோ ஒருவருக்கு இரவு பகலாக உழைத்து அவருக்கு இலட்சங்களில் உழைத்துக் கொடுத்து நாம் சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு அதையும் அவர்கள் விற்கும் பொருளுக்கே கொடுத்துவிட்டு 'மகிழ்ச்சியாக' வாழ்வது தான் வாழ்க்கையா? 

நமக்குப் பிடித்த வேலை, நினைத்த நேரத்தில் உறக்கம், பிடித்த இடங்களுக்குப் பயணம் இதையெல்லாம் அம்பானிகள் மாத்திரம் தான் அனுபவிக்க வேண்டுமா? சாமானியர்களுக்கு அதற்கான உரிமைகள் இல்லையா? சரி, உலக வழக்கங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமல்லவா? 

எனது நீண்டகாலக் கனவு நனவாகவிருக்கிறது. உன்னைப் போலவே நானும் ஊடகத் துறையில் கால்பதிக்கப் போகிறேன். இலங்கையின் பிரபல பத்திரிகை நிறுவனமான எண்பது ஆண்டுகால வரலாறு கொண்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் நவம்பர் முதலாம் திகதி முதல் இணைந்துகொள்ளவுள்ளேன். 

நீண்டகால எதிர்பார்ப்பு ஒருவழியாகப் பூர்த்தியாகவிருக்கிறது. மகிழ்ச்சி. ஆனால் பொருளாதார ரீதியாக வரும் சவாலைச் சந்திக்க வேண்டும். குறைவான அடிப்படை சம்பளத்தில் இருந்து துவங்க வேண்டும். கொழும்பு போன்ற பெருநகரத்தில் இலட்சங்களில் உழைத்தாலே போதாது. இந்த நிலையில் ஒரு சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு காலத்தை தள்ள வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. 

உனது கன்னிப் படைப்பான 'வானவல்லி' வெற்றிக்கொடியை நாட்டிவிட்டது. 'வென்வேல் சென்னி'யும் சிறப்பு. இந்த வெற்றிகள் இன்னும் தொடர வேண்டும். சிறுகதைத் தொகுப்பொன்றையும் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் வரலாற்று நாவல் இல்லாமல் சமூக நாவல் ஒன்றையும் நீ எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இந்தக் கடிதத்தில் இது போதும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் உனது பதிலை எதிர்பார்க்கிறேன். குரல் வழியே எவ்வளவுதான் உரையாடினாலும் எழுத்தில் உரையாடுவது தனி சுகம் தான். மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கலாம்...

இப்படிக்கு, 
அன்பு நண்பன் 
சிகரம் பாரதி 
மலையகம், இலங்கை. 

2 comments :

  1. வணக்கம் நண்பா..

    விரைவில் பதில் கடிதம் கிடைக்கப்பெறுவாய். எழுத்துலகுக்கு உன்னை நான் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  2. அம்பானிகளால் நிச்சயம் நினைத்த நேரத்தில் உறங்கமுடியாது.

    ReplyDelete

Ads

My Blog List