Tuesday, 25 October 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் - 02

பேரன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம் நண்பா!

உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

நீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ செய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலகைக் காட்டு. குழந்தை புரிந்துகொள்ளட்டும். குழந்தையை அதன் போக்கிற்கு வளர விடு. சுதந்திரமாக முடிவெடுக் கற்றுக்கொடு. அதற்காகக் கட்டுப்பாடு இல்லாமலும் வளர்க்கச் சொல்லவில்லை. உன்னைப் போன்றே குழந்தையும் பல கதைகளைக் கேட்டு வளரட்டும். நாம் கூறும் கதைகளில் அவனே ராஜாவாக வாழட்டும்.

தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது வேறு. பழக்குவது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

முதல் கடிதத்தில் நீ, வா, போ என்று உரிமையுடன் அழைத்திருந்தாய். ஆனால், கடந்த கடிதத்தில் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு என்று பெரும் மரியாதையுடன் தொடங்கியிருக்கிறாய். இந்த மரியாதை எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. சரி, அதை விடுவோம். நாம் இப்பொழுதே பழகத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் அதற்குள் பிரிவினைப் பற்றி கவலைப் படுகிறாய், அதற்கு அவசியமே இல்லை என்று கருதுகிறேன் நான். 

'கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் 
தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு'

என்ற நாலடியார் பாடலைப் போன்றே நம் நட்பும் வளரும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதில் உனக்கு அணுவளவும் ஐயம் வேண்டாம் நண்பா.

வரவர எழுத்தின் தரம் தாழ்ந்து கொண்டு வருவதாக வருத்தப்பட்டாய். ஒரு வரியை உடைத்துப் போட்டாலே அதுதான் கவிதை என்கிறார்கள். நாமும் தொடக்கத்தில் அப்படித்தான் எழுதினோம் என்பதை மறக்கக் கூடாது நண்பா. மனிதன் கூட ஒரு காலத்தில் ஆடையின்றி சுற்றித்தான் இன்றைய நாகரீகத்தினை கற்றுக்கொண்டான். எழுத்தும் அப்படித்தான். தொடக்கத்தில் அது அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். வெளிப்படுத்த வெளிப்படுத்தத் தான் அது தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டு சிறப்பாக வெளிப்படும். ஆதலால் அதை பற்றி நீ கவலைப் படாதே. எதுவுமே எழுதாமல் இருப்பதற்குப் பதில் முகப்புப் புத்தகத்திலாவது ஏதாவது எழுதுகிறார்களே, அதுவரை நாம் மகிழ்ச்சி அடையவே வேண்டும். என்னைக் கேட்டால் ஓட இயலாத போது நடக்க வேண்டும். நடக்க இயலாத போது நகர வேண்டும். நகர இயலாத போது உருள வேண்டும். உருள இயலாத போது முயற்சிக்க வேண்டும். ஆதலால் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். எழுதுபவர்கள் தம் எழுத்தினை மேம்படுத்திக் கொண்டிருப்பது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம் எழுதுவதே உலகின் ஆகச்சிறந்த இலக்கியம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் தமிழ் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு சாரு நிவேதிதா. அவரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாய். மிகச் சிறந்த எழுத்தாளர். ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப் போய் விட்டார். அவர் கதை நமக்கு வேண்டாம்.

வேலைப்பளு வரவர அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆதலால்,வென்வேல் சென்னியின் வேகம் வானவல்லியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பருக்குள் சென்னி முதல் பாகத்தை முடித்ததுவிடுவேன் என்று நம்புகிறேன். இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்னி மொத்தமாக வெளியிடப்படும்.

நீ பத்திரமாக இரு. எந்தச் சூழலிலும் எழுதுவதை நிறுத்தாதே. தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. மற்றவர்கள் வாங்கும் லைக்குகளை எண்ணி மயங்காதே... அது உனது வளர்ச்சியை பாதிக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நமது தாத்தா கூறியிருக்கிறார். ஆதலால் எந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பெரியதாகவே இருக்கட்டும். வெற்றி உனதாகட்டும்.

அன்புடன்...
சி.வெற்றிவேல்.

  _________________________________________________________________________________

கடிதத்திற்கு நன்றி நண்பா. எனது பதில் கடிதம் விரைவில்...

இக்கடிதத்தை நண்பர் வெற்றிவேல் அவர்களின் தளத்தில் காண:


No comments :

Post a Comment

Ads

My Blog List