Friday 16 November 2018

குப்பைகள்

பாடப் புத்தகங்களை 
பைகளில் சுமந்து 
பள்ளிக்கூடம் செல்லும் 
பிஞ்சுகளின் முதுகில் 
பாரமாய் குப்பைகள்! 

விதியின் விளையாட்டில் 
வறுமையின் பிடியில் 
வாழ்க்கையைத் தொலைத்த 
வஞ்சகமில்லாப் பிஞ்சுகளுக்கு 
வாழ வழியேது? 




கண்ணுக்குத் தெரியும் 
காகிதக் குப்பைகளை 
கணப்பொழுதில் அகற்றிடலாம் 
கண்ணுக்குள் தெரியும் மனக் 
குப்பைகளை யாரறிவார்? 

குப்பைகளைப் போலவே 
கரையிலாக் கனவுகளையும் 
கள்ளமில்லா உள்ளங்கள் 
கைகளில் ஏந்திவரும் வேளை 
கைகொடுப்போம் நாமும்! 

-சிகரம் பாரதி 
09.11.2018 
மெட்ரோ நியூஸ் 
வெள்ளி வார இதழ் 
பக்கம்: B 12 

Tuesday 6 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 28 & 29.10.2018

இலங்கை அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க 19வது திருத்தத்தின் பிரகாரம் மைத்திரிக்கு தன்னை நீக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறுகிறார்.

இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியுள்ளதால் பிரதமர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.



ரணில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார். மஹிந்த தரப்பு ரணிலுக்கு காலக்கெடு விதித்துள்ளது.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். நாடாளுமன்றின் இரண்டாம் கூட்டத் தொடர் மைத்திரிபாலவினால் விசேட வர்த்தமானி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நவம்பர் 16ஆம் திகதியே துவங்கும்.

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் வரை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பேரம் பேசல்கள் இடம்பெறும். சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும்.

16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது மைத்திரிபால சிறிசேன தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மஹிந்த பிரதமர் பதவியை இழப்பதுடன் வரவு செலவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்க முடியாது போகும்.

இதன் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி கைகொடுக்காத பட்சத்தில் ஆட்சி கவிழ்வதுடன் பொதுத் தேர்தலை நோக்கி நோக்கி நாடு செல்லும். நாட்டில் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் நிலையற்ற அரசாங்கமும் தேர்தலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆட்சி மாற்றம் நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு வந்துள்ளது. அண்மையில் மைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீண்ட காலமாகவே தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

புதிய ஆட்சியில் மஹிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவாரா அல்லது பொதுஜன பெரமுண கட்சியிலேயே தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியே.

நம்மிடம் கேள்விகள் நிறைந்துள்ளன. பதில்கள் அரசாங்கத்திடமே உள்ளன. வரும் நாட்களில் இன்னும் புதிய விடயங்கள் வெளியாகும். பெரும்பான்மை யாருக்கு? தேர்தல் வருமா? காத்திருப்போம். 

(28.10.2018) 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் நாட்டை கொள்ளையிட முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்று வருடங்களாக தன் மனதில் அடக்கி வைத்திருந்த ரகசியங்களை நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்தார். அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகவும் நேரமின்மை காரணமாக அவற்றை இப்போது கூறமுடியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் அவ்வப்போது அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டார்.


ரணில் விக்கிரமசிங்கவை சிறைப்படுத்தக் கூடிய காரணிகளும் காணப்படுகின்றன. இப்போதைக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும் புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருட ஆட்சி எஞ்சியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும்.

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையாகவும் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விதமாக அரசியலமைப்பில் மேற்கொண்ட திருத்தத்தை மைத்திரிபால சிறிசேன இரத்துச் செய்திருந்தார். மீண்டும் அந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா?

அல்லது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் பதவிக்கு வழங்கி மஹிந்த அடுத்த ஆட்சியிலும் பிரதமராகவே தொடர்வாரா? அல்லது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ளப்படுமா?

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யார் யாருக்கு துரோகம் செய்தார்களோ இல்லையோ நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது என்பதை உண்மை. அந்த துரோகத்திற்கான பரிகாரம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவது மட்டுமே! 

(29.10.2018) 

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த. மக்கள் ஆணையைப் பெற்று பிரதமர் ஆசனத்தில் மட்டுமல்ல எந்த ஆசனத்திலும் அமரலாம். அதுவே ஜனநாயக நடைமுறையும் கூட. எங்கள் வாக்குகளுக்கு ஐந்து வருட கால செல்லுபடியாகும் தன்மை இருக்கிறது.

ஆனால் யாருக்கு எந்த கட்சிக்கு வாக்கை வழங்கினோமோ அந்த அடிப்படையில் மட்டுமே செல்லுபடியாகும். கட்சி மாற்றம் ஆட்சி மாற்றம் என்பதற்கெல்லாம் நாம் வாக்களிக்கவில்லை.

ஏதோ டொலரின் பெறுமதியை 125/-க்கு மட்டுப்படுத்தினால் சரி 

(29.10.2018) 

Monday 5 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 26 & 27.10.2018

இலங்கை அரசியலில் புதிய திருப்பம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக தான் அதிகாரத்தைக் கைப்பற்ற காரணமான ஐக்கிய தேசிய கட்சியையே தூக்கி எறிந்து நாட்டின் ஊழல்வாதி என தானே பிரகடனப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

நாம் வாக்களித்தது ரணில் - மைத்திரி கூட்டணிக்குத் தான். மைத்திரி - மஹிந்த கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவில்லை. உண்மையில் மக்களுக்காக நீங்கள் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அல்லது மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இருந்தால் ஜனவரியில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள்.



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பின் கதவு வழியாக வந்து ஆட்சியில் அமர்ந்தது போல் பின் கதவு வழியாகவே ஆட்சி மாற்றத்தை செய்ய நினைப்பது தவறானது.

நவம்பர் 5ஆம் திகதி நாடாளுமன்றில் பலப்பரீட்சை நடாத்துவதற்குப் பதில் அன்றைய தினம் ஆட்சியை முழுமையாகவே கலைத்து விட்டு தேர்தலை அறிவியுங்கள்.

தேர்தலைச் சந்திக்க நாம் தயார். நீங்கள் தயாரா 

(26.10.2018) 


நல்லாட்சி அரசாங்கமோ எதுவும் எமக்குத் தேவையில்லை. எந்த அரசாங்கம் எமக்குத் தேவை என்பதை நாங்கள் தேர்தலில் தீர்மானித்துக் கொள்கிறோம். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். 

(26.10.2018) 

தமிழகத்தில் தாமரை மலர்கிறதோ இல்லையோ இலங்கையில் தாமரை மலர்ந்து விட்டது. ஆனால் கொல்லைப் புறத்தில் மலர்ந்திருப்பது தான் வேதனை! 

(27.10.2018) 

தொண்டமான் மஹிந்தவுக்கு ஆதரவு. திகா ரணிலுக்கு ஆதரவு. சம்பந்தன் யோசிக்கிறார்.

ஐந்தாம் திகதி கூடவிருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் 16ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை இப்போது தான் உருவாக்கப் பட்டிருக்கிறது. மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டம் இன்னும் முடியவில்லை. கூட்டு ஒப்பந்த பிரச்சினை அந்தரத்தில் தொங்குகிறது.

புதிய அரசு நாடாளுமன்ற பலப்பரீட்சைக்கு தயாராக வேண்டும். வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டில் பல சிக்கல்களை இந்த புதிய ஆட்சி மாற்றம் உருவாக்கியிருக்கிறது. இனியாவது குழப்பம் இல்லாத ஆட்சியை வழங்குவதாக இருந்தால் நவம்பர் / டிசம்பரில் பொதுத்தேர்தலை நடாத்தி ஜனவரியில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மார்ச்சில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும்.

நடக்குமா? 

(27.10.2018)

Friday 2 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 25.10.2018

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வேதனமாக 1000வை வழங்கக் கோரி நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 24.10.2018 திகதியன்று 'குழு 24' எனப்படும் #Team24 இனால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

அரசியல் பேதங்கள் இன்றி ஒன்றிணைந்த நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இந்தப் போராட்டங்கள் இத்துடன் முடிந்து போகக் கூடாது. மலையக மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இப்போராட்டம் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.



சமூக அக்கறையுள்ள, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அரசியல் மாற்றமொன்றுக்குத் தயாராக வேண்டும். காலம் காலமாக அரசியல் செய்து நம்மை ஏமாற்றிப் பிழைப்பவர்களை புறந்தள்ளி புதியவர்களை நம்மவர்களை அரசியல் அதிகாரத்தில் அமரவைக்க வேண்டும்.

2019 ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறும். இதுவரை நம்மை ஆண்ட அரசியல் வாதிகளுக்கு ஓய்வளிப்போம். புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு, படித்தவர்களுக்கு வாக்களிப்போம். நம் சமூகம் உருவாக்கும் இந்த மாற்றம் முழு உலகுக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுப் போராட்டத்தில் ஒன்றிணைந்த நாம் மலையகத்துக்கான புதிய அரசியல் மாற்றத்திலும் ஒன்றிணைய வேண்டும். இது நமது அதிகாரம். நமக்கான அதிகாரம். நம்மை நாமே ஆள்வோம், நமது அதிகாரம், நமது உரிமை!



பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளமாக ரூ 1000 கோரும் நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் அடிப்படை சம்பளமாக ரூ 600 மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளன. அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. 



ஆனால் எல்லா தொழிலாளியும் அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை பெறுவது சாத்தியம் இல்லை. ஆகவே இலங்கை அரசு இதில் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும். வருடாந்த சம்பள அதிகரிப்புடன் மாதாந்த சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும்!

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.... | வலைச்சரம்

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

என்னடா இது? ரெண்டு நாளா நம்ம சிகரம்பாரதிய காணோமேன்னு நீங்க எல்லோரும் யோசிச்சிருப்பீங்க. முதலில் இரண்டு நாட்களாக இடுகை இடாமல் இறுதி இடுகைக்கு மட்டும் வந்திருப்பதற்கு மனதார மன்னிப்பைக் கோருகிறேன். பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்த சூழ்நிலையில் என்னால் பதிவிட முடியவில்லை. சோதனைகளிடம் தோற்றுவிட்டேன். வென்றிருந்தால் வலைச்சரம் வந்திருப்பேன்.  வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....


இன்று எனக்குப் பிடித்த, நான் வாசிக்கும் வலைப்பதிவுகள் வலைச்சரத்தில் அணிவகுக்கப்போகின்றன. வாருங்கள்... ..போகலாம்....

முதலாவது - திண்டுக்கல் தனபாலன். தனது பெயரிலேயே தனது தளத்தையும் அமைத்திருக்கின்ற இவரை முதலில் அறிமுகம் செய்யக் காரணம் இவரது குணம் தான். ஆம். தனது பதிவுகள் மூலமாக மட்டுமின்றி பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரைகளை இடுவதன் மூலமும் நம் அனைவரையும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் இவரது செயலைப் போல பிற பதிவர் எவரையும் கண்டதில்லை. வலைப்பதிவுகளை அடைவதில் சிக்கலா? உடனே பின்னூட்டம் மூலம் தகவல் தருவார். வலைச்சர அறிமுகமா? தகவல் சொல்வது தனபாலன் தான். உதவி என்று சொன்னால் தன்பணி போல் செய்து முடிப்பார். வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் பல. என்னைக் கவர்ந்த இவரது பதிவுகள் சில:




அடுத்தது - இரவின் புன்னகை. வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி தொலைபேசி நட்புவரை தொடர்ந்த ஒரே வெளிநாட்டு நண்பர். என்னோடு சம வயதுகளில் இருப்பவர். மிகச்சிறந்த தேடல் உள்ளவர். இப்போது "வானவல்லி" என்னும் சரித்திர நாவலை எழுதி வருகிறார். சக பதிவர்கள் அனைவரையும் சி.வெற்றிவேல் படைக்கும் இந்நாவல் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

மூன்றாவது புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்களின் புலவர் குரல். சமூக அநீதிகளை தன் கவி வரிகள் மூலம் சிறப்பாக எடுத்துரைப்பவர். குப்பையை அகற்ற வேண்டாமா , திருக்குறள்  மற்றும் ஓயாத அலை போல முயற்சி வேண்டும் போன்ற பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

********



இதுவரை எனது பதிவுகள் அனைத்தையும் படித்து ஆதரவும் ஊக்கமும் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். எனது பதிவுகளுக்கு வலைச்சரத்தில் கருத்திட்டவர்களுக்கு பதிலளிக்க நேரமில்லாது போய்விட்டது. அவர்கள் அனைவர்க்கும் பதிலளிக்கப்படும் என்பதுடன் முக்கியமான கருத்துரைகளுக்கு எனது வலைத்தளத்தில் தனிப்பதிவின் மூலம் பதிலளிக்கப்படும்.



இலங்கைப் பதிவர்களை அறிமுகப்படுத்த கடுமையான தேடலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அதிக பதிவுகளை இட முடியாமல் போனதும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாது போனதும். 

வாய்ப்பளித்த "வலைச்சரம்" குழுவினருக்கு நன்றிகள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்யக் காத்திருக்கிறேன்.

இதோ மீண்டும் எனது வலைப்பதிவுகளின் பட்டியல்.




எனது நண்பியின் வலைத்தளம் 


அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி 


அன்புடன் 

சிகரம்பாரதி.

Ads

My Blog List