Tuesday, 11 September 2018

கிரிக்கெட்டும் நானும்!

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.  

Image credits to its owner only


இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை. 

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!

Monday, 10 September 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தப்பட்டது ]

01. நினைவுகள்

'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்... 
நல்ல நாளில்....
கண்ணன் மணித் தோளில் ....
பூமாலை நான் சூடுவேன்....
பாமாலை நான் பாடுவேன்... 
என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை. 

இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை. 

சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்."சொல்லுங்கப்பா"

"ஜெய்... இன்னும் புறப்படலையா?"

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" 

"..................................."

"சரி விடு. நா பாத்துக்குறேன்...."

"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."

"சரி ஜெய்" 

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?"

"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"

"ம்....... நா எதுக்கு........"

"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."

"சரிடா."

"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

Tuesday, 4 September 2018

உலக அழிவு எப்படி இருக்கும்?

தூறல் - 04 

இப்போது உலகம் அழியுமா, இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது. உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 

Image credits to its owner only


யூகம் 01 : டினோசர் என்ற விலங்கினத்தின் அழிவுக்கு ஒரு விண்கல் காரணமாயிருந்ததைப் போன்று எதிர்காலத்தில் வரப் போகும் விண்கல்லானது ஒட்டு மொத்த மனித இனத்தின் அழிவுக்கும் காரணமாயிருக்கும்.

யூகம் 02 : வேற்றுக்கிரகவாசிகள் உலகை அழிக்க படையெடுத்து வருவார்களாம். அதாவது வேற்றுக்கிரகவாசிகள் தொழிநுட்பத்தில் நம்மைவிட கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. ஆகவே, பூமியை நோக்கி வரக்கூடிய அவர்கள் பூமியை அழித்து தமது பலத்தை நிலைநாட்ட முயற்சிக்கலாம். 

யூகம் 03 : மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனே (Robot) மனிதர்களையும் இந்த உலகத்தையும் அழிக்க முற்படலாம். ஏனெனில் இயந்திர மனிதனுக்கு சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை வழங்க தொழி நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றின் சுய சிந்தனை மனிதனை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தால்? 

யூகம் 04 : அம்மை நோய், சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்று நுண்ணுயிர்க் கிருமிகளினால் பாரிய - மனிதனால் கட்டுப் படுத்த முடியாத நோயொன்று உலகம் முழுவதும் பரவுவதன் மூலம் பாரிய அழிவொன்று ஏற்படலாம். 

இந்த நான்கு காரணிகள் மட்டுமல்ல, இன்னும் பல காரணிகள் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். சில வேளை உலக அழிவுக்கு நீங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இப்போது உங்கள் மூளை என்ன யூகிக்கிறது? 'கடவுளே! உலக அழிவுக்கு முன்னாடி நான் செத்துப் போயிடணும்!?' .

பதிவின் தலைப்பு : உலக அழிவு எப்படி இருக்கும்? 

வலைப்பதிவு : தூறல்கள் 

வெளியிட்ட திகதி : 23.09.2010 

Ads

My Blog List