Monday 10 September 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தப்பட்டது ]

01. நினைவுகள்

'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்... 
நல்ல நாளில்....
கண்ணன் மணித் தோளில் ....
பூமாலை நான் சூடுவேன்....
பாமாலை நான் பாடுவேன்... 
என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை. 

இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை. 

சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்.



"சொல்லுங்கப்பா"

"ஜெய்... இன்னும் புறப்படலையா?"

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" 

"..................................."

"சரி விடு. நா பாத்துக்குறேன்...."

"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."

"சரி ஜெய்" 

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?"

"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"

"ம்....... நா எதுக்கு........"

"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."

"சரிடா."

"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

No comments :

Post a Comment

Ads

My Blog List