Thursday 25 October 2018

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 04

அன்பு நண்பன் உடன்பிறவா சகோதரன் வெற்றிவேலுக்கு வணக்கங்கள் பல! 

நலம், நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மற்றுமோர் கடிதம். உன் குடும்பத்தில் எல்லோரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும். 

உன் ஊடகப் பயணம் எப்படி இருக்கிறது? பெங்களூரு வேலைக்கும் விகடனின் பணிக்குமான வித்தியாசம் பிடித்திருக்கிறதா? பெங்களூருவில் இருந்து பிரிந்திருப்பதாக நினைப்பது எது? விகடன் உனக்குப் பிடித்தமான அனுபவங்களைத் தரலாம். விரைவில் உன் அடுத்த படைப்பு விகடன் பிரசுரத்தில் வெளியாக வேண்டும். 



வாழ்க்கை விசித்திரமானது. இன்று நாம் சரியெனக் கருதி எடுக்கும் முடிவுகள் நாளை எதிர்பார்த்த விளைவுகளைத் தருவதில்லை. எங்கோ ஆரம்பித்து கடைசியில் வேறெங்கோ போய் நிற்கிறோம். ஒரு நிமிடம் நின்று நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் இத்தனை நாளாக நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்கிற கேள்வி மட்டுமே எஞ்சுகிறது. மறுபடியும் பதிலைத் தேடி ஓடுகிறோம். 

என்னைப் பொறுத்தவரை நான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது என்னுடைய வாழ்க்கை இல்லை அல்லது இது எனக்கான வாழ்க்கை இல்லை என்றே சொல்வேன். ஆனால் சமரசங்களால் ஆன வாழ்க்கையை ஒப்புக்கொண்ட பிறகு அதிலிருந்து பின்வாங்குவது உலக நியாயங்களுக்கு அப்பாற்பட்டதல்லவா? 

நமக்கென்று ஓர் இலக்கு இருக்கிறது. ஒரு இலட்சியம் இருக்கிறது. ஆனால் அதை நோக்கி ஓட முடியவில்லையே? யாரோ ஒருவருக்கு இரவு பகலாக உழைத்து அவருக்கு இலட்சங்களில் உழைத்துக் கொடுத்து நாம் சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு அதையும் அவர்கள் விற்கும் பொருளுக்கே கொடுத்துவிட்டு 'மகிழ்ச்சியாக' வாழ்வது தான் வாழ்க்கையா? 

நமக்குப் பிடித்த வேலை, நினைத்த நேரத்தில் உறக்கம், பிடித்த இடங்களுக்குப் பயணம் இதையெல்லாம் அம்பானிகள் மாத்திரம் தான் அனுபவிக்க வேண்டுமா? சாமானியர்களுக்கு அதற்கான உரிமைகள் இல்லையா? சரி, உலக வழக்கங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமல்லவா? 

எனது நீண்டகாலக் கனவு நனவாகவிருக்கிறது. உன்னைப் போலவே நானும் ஊடகத் துறையில் கால்பதிக்கப் போகிறேன். இலங்கையின் பிரபல பத்திரிகை நிறுவனமான எண்பது ஆண்டுகால வரலாறு கொண்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் நவம்பர் முதலாம் திகதி முதல் இணைந்துகொள்ளவுள்ளேன். 

நீண்டகால எதிர்பார்ப்பு ஒருவழியாகப் பூர்த்தியாகவிருக்கிறது. மகிழ்ச்சி. ஆனால் பொருளாதார ரீதியாக வரும் சவாலைச் சந்திக்க வேண்டும். குறைவான அடிப்படை சம்பளத்தில் இருந்து துவங்க வேண்டும். கொழும்பு போன்ற பெருநகரத்தில் இலட்சங்களில் உழைத்தாலே போதாது. இந்த நிலையில் ஒரு சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு காலத்தை தள்ள வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. 

உனது கன்னிப் படைப்பான 'வானவல்லி' வெற்றிக்கொடியை நாட்டிவிட்டது. 'வென்வேல் சென்னி'யும் சிறப்பு. இந்த வெற்றிகள் இன்னும் தொடர வேண்டும். சிறுகதைத் தொகுப்பொன்றையும் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் வரலாற்று நாவல் இல்லாமல் சமூக நாவல் ஒன்றையும் நீ எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இந்தக் கடிதத்தில் இது போதும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் உனது பதிலை எதிர்பார்க்கிறேன். குரல் வழியே எவ்வளவுதான் உரையாடினாலும் எழுத்தில் உரையாடுவது தனி சுகம் தான். மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கலாம்...

இப்படிக்கு, 
அன்பு நண்பன் 
சிகரம் பாரதி 
மலையகம், இலங்கை. 

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகம் தொடர்கிறது.

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவுகளில் எழுதிவரும் புலம்பெயர் தமிழரான கானா பிரபா "மடத்துவாசல் பிள்ளையாரடி" , "ரேடியோஸ்பதி" மற்றும் "உலாத்தல்" ஆகிய வலைத்தளங்களின் சொந்தக்காரர். "வாண்டுமாமா - எங்கள்  பால்ய காலத்துக் கதை சொல்லி" , "மனதோடு பேசிய ஸ்வர்ணலதா" மற்றும் "திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

"ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவானது ஈழத்து வலைப்பதிவர்களால் நடாத்தப்படும் ஒரு குழும வலைப்பதிவாகும். சுமார் 40 பேரளவில் இவ்வலைப்பதிவுக்கு தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர். "பெண்களும் நகைகளும்" மற்றும் "நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை. பங்களிப்போர் பட்டியல் நீளமாக இருக்கும் அளவுக்கு படைப்புகள் வெளிவராததும் ஏனோ?



நம்முடைய கருவறைப் பயணம் எப்படி இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஹாரியின் "ஹாரி 2G" வலைத்தளத்தின் "எமது கருவறை படி நிலைகள்" என்ற பதிவைத்தான். மேலும் இவரது "IDEAS OF ஹாரி" தளத்தில் எழுதியுள்ள "கோச்சடையான் (2014) பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை" ஒரு கைதேர்ந்த திரை விமர்சகனின் பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இலங்கை சாராத தளங்களில் வெளிவந்துள்ள ஆனால் மலையகம் மற்றும் ஈழம் சார்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடிய பதிவுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".

ஈழ வரலாற்றுத் தொடர் - ஈழத்தின் உருவாக்கம் தொடங்கி ராஜீவின் மரணம் வரை - "ஈழம் : முகப்புப் பக்கம்"


இன்னும் இருக்கிறது. நேரம் போதாமை காரணமாக மிகுதி அடுத்த பதிவில்...

அதுவரை ,
அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 23.10.2018

பூவெல்லாம் உன் வாசம்

******

பூவுக்கு ஏதடி வாசம் 
உன் இதழ்களில் தேன்குடிக்கும் 
வண்டுகளின் தொல்லை தாங்காமல் 
உன் வாசத்தையெல்லாம் 
நீ தானே உயில் எழுதி வைத்தாய்?

- சிகரம் பாரதி

(23.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 



என் எண்ண 
ஊஞ்சலில் ஆடுகிறேன்
உன் நினைவுகள் ஆட்டுவித்துக்
கொண்டேயிருக்கின்றன
எது வரை ஆட முடியும்
உன் நினைவுகளுக்கா பஞ்சம்
வாழ்நாள் முழுவதும் 
என்னை ஆட்டுவிக்குமே? 

(23.10.2018) 

இலங்கை: கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் அமைப்பில் 2019ஆம் ஆண்டு முதல் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே அடுத்த வருடம் முதல் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் இந்த மாற்றங்களை அவதானித்துக் கொள்ளுங்கள். மாதிரி வினாப்பத்திரங்கள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள். இந்த இணைப்பில் தமிழ் மொழி மூல வினாத்தாள்களை பெற்றுக் கொள்ளலாம். 


(23.10.2018) 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தப்பட்டது ]

03. கண்டேன் காதலை

பயணங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. சிலரின் வாழ்வில் மறக்க முடியாதவை. நம் வாழ்க்கையில் பல நூறு பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நம்மால் மறக்கவியலாது. எனது இந்தப் பயணம் என் காதலைக் கொன்று இன்னொருத்தியை என் மனதிற்குக் காவல் வைக்கப்போகும் பயணம். என் வாழ்க்கைப் பாதையைத் திசை மாற்றப்போகும் பயணம். இந்தத் தமிழ்த் திரைப்படங்களைப் போல இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் நடக்கும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாதா என்றே என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தேன் நான். 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில்  ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.  வரவேற்பறையிலிருந்த வானொலி எங்களைக் கண்டதும் பாடத் துவங்கியது.

'சீதா கல்யாண .வைபோகமே...
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே...' 

இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.



பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.

மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"- எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?

கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.

என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 22.10.2018

தனிநபர் தகவல் பாதுகாப்பு மிக முக்கியமானது. இன்றைய கணினி யுகத்தில் நம் அன்றாடத் தேவைகளுக்குக் கூட இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் எல்லா இடங்களிலும் நமது எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பேஸ்புக், கூகுள் என முன்னணி தகவல் பரிமாற்ற நிறுவனங்களிலேயே தகவல் திருட்டு இலகுவாக இடம்பெறும் போது மற்ற நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்? நமது தகவல்களுக்கு நாமே பொறுப்பு. உணர்ந்து நடந்து கொள்வது அவசியம்.

(22.10.2018) 



ஒரு வழிப் பயணம்

*******

இருவிழி வழியே
கருவிழி கண்டேன்
மான்விழி கொண்டு 
என்விழி நோக்கி
உயிர்வழி நுழைந்து
உயிர்வலி தந்தாய்
வேல்விழியாளே
என் வலி அறியாயோ
ஒருவழிப் பயணம் காதல்
வரும்வழி தெரியும்
மீளும்வழி அறியேன்
உன்விழி ஒன்றே - என்
காதல் பயணிக்கும் வழி!

- சிகரம் பாரதி 

(22.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

Dialog Axiata இலங்கையில் 5G சோதனையையே வெற்றிகரமாக முடித்திருக்கிறது. சில இடங்களில் 4.5G இணைப்புகளையும் வழங்கியிருக்கிறது. Hutch Sri Lanka இப்போது தான் 4G வழங்கவே ஆரம்பித்திருக்கிறது. வெளங்கிரும்!

இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? 

(22.10.2018) 

அல்ஜசீரா தொலைக்காட்சி கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா 7, இங்கிலாந்து 5, பாகிஸ்தான் 3 தடவைகள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய அணிகள் குறைந்த பட்சம் தலா ஒரு தடவை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளன. 'முனாவர் ஆவணங்கள்' என்னும் பெயரில் அல்ஜசீரா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரர்களே ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபை விரிவான விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். 

(22.10.2018) 

Tuesday 23 October 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தப்பட்டது ]

02. குழம்பிய மனம் 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.



"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்துவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்த சமயம் தற்செயலாய் நிலைக்கண்ணாடி மீது என் கவனம் விழ அதில் என்னைப் பார்த்த நான் ஒரு விநாடி சிலையாய் நின்றுவிட்டேன். அந்த விநாடியில் தோன்றி மறைந்த பழைய நினைவுகள் தான் அதற்குக் காரணம். ஒருமுறை உறவினர் திருமண வைபவம் ஒன்றுக்கு நான் பட்டுவேட்டி, சட்டை சகிதம் சென்றிருக்க அங்கு திவ்யாவும் வந்திருந்தாள். 

அப்போது என்னைப் பார்த்த மாத்திரத்தில் "மாமோய்... செமயா இருக்கீங்க... ம்... ம்... கலக்குங்க... கலக்குங்க..." என்றாள். அவள் சொன்னதும் எனக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் வித்தியாசமாகச் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அன்று எடுத்த புகைப்படத்தை இன்று பார்த்தாலும் அவளது அந்த வசனம் பசுமையாய் என் காதுகளில் கேட்கும். 

ஆமா... இந்த 'திவ்யா' யாரு? 'திவ்யா... திவ்யா... என்...' தெரியவில்லை. 'என் காதலி' என்று சொல்வதா அல்லது 'என் முன்னாள் காதலி' என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிச்சயதார்த்தத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பது திவ்யாவைப் பெண் பார்க்க இல்லை என்பது மட்டுமே எனக்குத் தெரியும். 

அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் வெளியே வந்தேன். சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

Monday 22 October 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 21.10.2018

நீண்ட காலக் கனவாக இருந்த ஊடகத்துறையில் கால்பதிக்கும் கனவு நனவாகியிருக்கிறது. ஆனால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. காரணம் ஆரம்ப சம்பளம் மிகக் குறைவு. மீண்டும் ஏழு வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்ட நிலை. தாக்குப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை கைபிடித்து அழைத்துச் செல்வதும் கைவிடுவதும் காலத்தின் கைகளில் தான் இருக்கிறது. 

(20.10.2018) 

வெளிநாட்டில் வசிக்கும் மிகப்பெரிய பணக்காரர் விஜய். தேர்தலில் வாக்களிப்பதற்காக (?) இந்தியா வருகிறார். ஆனால் தேர்தலில் அவரது வாக்கையே கள்ள வாக்கு போட்டுவிடுகிறார்கள். அவர்கள் யார் எவர் என்று கண்டுபிடித்து அழித்து தனது பண பலத்தால் மாற்று அரசை அமைப்பது தான் சர்க்கார்.

மிடில...
#sarkar #சர்க்கார் 



(20.10.2018) 

நான் தருவேன் 
*****
நான் சூடும் மணமாலை/ 
நம் உறவுகள் / 
கூடி நிற்கும் இவ்வேளை / 
குறைவில்லா வாழ்வை / 
தாயாய் தந்தையாய் நானுனக்கு / 
தருவேன் நிச்சயமாய்! 

(21.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்கு ஆதரவாக வடக்கு தமிழ் மக்களும் கொழும்பு வாழ் தமிழர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

1000 ரூபா சம்பள உயர்வு என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. மேலும் 1000 ரூபா சம்பள உயர்வு மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று உறுதி கூற முடியாது. குறைந்த பட்சம் 25 நாள் வேலை வழங்கப்பட வேண்டும். 15 அல்லது 20 நாள் வேலை வழங்கப்படுமானால் சம்பள உயர்வு வீண் தான்.

மலையக மக்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால் மலையக மக்களுக்கு 20,000 அடிப்படை சம்பளத்துடன் மாதாந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

செய்வார்களா? 

(21.10.2018)

Ads

My Blog List