Tuesday 11 September 2018

கிரிக்கெட்டும் நானும்!

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.  

Image credits to its owner only


இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை. 

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!

Monday 10 September 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தப்பட்டது ]

01. நினைவுகள்

'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்... 
நல்ல நாளில்....
கண்ணன் மணித் தோளில் ....
பூமாலை நான் சூடுவேன்....
பாமாலை நான் பாடுவேன்... 
என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை. 

இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை. 

சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்.



"சொல்லுங்கப்பா"

"ஜெய்... இன்னும் புறப்படலையா?"

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" 

"..................................."

"சரி விடு. நா பாத்துக்குறேன்...."

"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."

"சரி ஜெய்" 

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?"

"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"

"ம்....... நா எதுக்கு........"

"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."

"சரிடா."

"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

Tuesday 4 September 2018

உலக அழிவு எப்படி இருக்கும்?

தூறல் - 04 

இப்போது உலகம் அழியுமா, இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது. உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 

Image credits to its owner only


யூகம் 01 : டினோசர் என்ற விலங்கினத்தின் அழிவுக்கு ஒரு விண்கல் காரணமாயிருந்ததைப் போன்று எதிர்காலத்தில் வரப் போகும் விண்கல்லானது ஒட்டு மொத்த மனித இனத்தின் அழிவுக்கும் காரணமாயிருக்கும்.

யூகம் 02 : வேற்றுக்கிரகவாசிகள் உலகை அழிக்க படையெடுத்து வருவார்களாம். அதாவது வேற்றுக்கிரகவாசிகள் தொழிநுட்பத்தில் நம்மைவிட கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. ஆகவே, பூமியை நோக்கி வரக்கூடிய அவர்கள் பூமியை அழித்து தமது பலத்தை நிலைநாட்ட முயற்சிக்கலாம். 

யூகம் 03 : மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனே (Robot) மனிதர்களையும் இந்த உலகத்தையும் அழிக்க முற்படலாம். ஏனெனில் இயந்திர மனிதனுக்கு சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை வழங்க தொழி நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றின் சுய சிந்தனை மனிதனை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தால்? 

யூகம் 04 : அம்மை நோய், சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்று நுண்ணுயிர்க் கிருமிகளினால் பாரிய - மனிதனால் கட்டுப் படுத்த முடியாத நோயொன்று உலகம் முழுவதும் பரவுவதன் மூலம் பாரிய அழிவொன்று ஏற்படலாம். 

இந்த நான்கு காரணிகள் மட்டுமல்ல, இன்னும் பல காரணிகள் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். சில வேளை உலக அழிவுக்கு நீங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இப்போது உங்கள் மூளை என்ன யூகிக்கிறது? 'கடவுளே! உலக அழிவுக்கு முன்னாடி நான் செத்துப் போயிடணும்!?' .

பதிவின் தலைப்பு : உலக அழிவு எப்படி இருக்கும்? 

வலைப்பதிவு : தூறல்கள் 

வெளியிட்ட திகதி : 23.09.2010 

என் மடிக்கணினிக்கு அகவை ஐந்து (சிகரம் பாரதி | 03.09.2018)

2013.09.01 அன்று என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்த மடிக்கணினியைக் கொள்வனவு செய்தேன். அதுநாள் வரை எனது வலைத்தளப் பணிகள் மற்றும் இதர இணைய தேவைகளுக்கு இணைய உலாவி நிலையங்களையே (Internet Browsing Centre) நான் நாட வேண்டியிருந்தது. கையில் பணம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும். எல்லா நேரங்களிலும் அங்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் நமது எல்லாத் தேவைகளையும் அந்த நிலையங்களால் பூர்த்தி செய்யவும் முடியாது. 

ஆகவே தான் தவணைக் கொடுப்பனவு முறையில் எனது கனவு மடிக்கணினியை கொள்வனவு செய்தேன். HP Note Book 2000 என்பது தான் என்னுடைய மடிக்கணினி. இலங்கைப் பெறுமதியில் ரூபா 85,000 மதிப்புக்கு கொள்வனவு செய்தேன். முதலில் ரூபா 25,000 உம் பின்னர் மாதாந்தம் 5,000 ரூபா வீதம் பன்னிரண்டு மாதங்களுக்கு கொடுப்பனவு செய்தேன். வட்டிப் பணம் விசேட சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்டது. Etisalat Dongle ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். 



ஐந்து வருடங்கள் எனக்காக உழைத்த என் மடிக்கணினி இப்போது ஓய்வெடுக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக திரையில் வர்ணங்கள் தெளிவாக இல்லை. குறிப்பாக சிவப்பு நிறம் ஆரஞ்சு நிறம் போலத் தோற்றமளிக்கிறது. இதனால் முக்கியப் பணிகளை மடிக்கணினியில் ஆற்ற முடியவில்லை. அடுத்து அண்மைக்காலமாக மின்கலம் செயலிழந்து காணப்படுகிறது. அதன் காரணமாக நேரடி மின் இணைப்பில் மட்டுமே மடிக்கணினியை இயக்க முடியும். மடிக்கணினி எப்போது மரணத்தைத் தழுவும் எனக் கணிக்க முடியவில்லை. 

அண்மையில் Singer DUO 2 in 1 Note Book ஐ கொள்வனவு செய்திருந்தேன். இலங்கை மதிப்பில் ரூபா 30,000 பெறுமதி. Tab ஆகவும் PC ஆகவும் இதனை உபயோகிக்க முடியும். ஆனால் கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் இதில் செய்ய முடியாது. உள்ளக நினைவகத் திறன் 32GB மட்டுமே. மடிக்கணினியின் உள்ளக நினைவகத் திறன் 500GB. மடிக்கணினியின் திரை 15.2 அங்குலம். Tab இன் திரை 10.1 அங்குலம். மடிக்கணினியில் தொடுதிரை (Touch Screen) கிடையாது. Tab இல் தொடுதிரை உண்டு. 

இரண்டிலும் தனியான இலக்க விசைகள் (Dedicated Number Keys) கிடையாது என்பது எனக்கு எப்போதுமே நெருடலான விடயமாக இருந்து வந்திருக்கிறது. மேலும் இப்போது புதிய மடிக்கணினியைக் கொள்வனவு செய்வதற்கான தேவையும் எழுந்திருக்கிறது. ஆனால் கையில் பணம் இல்லை. கடந்த மூன்று மாதமாக தொழிலும் இல்லை. இந்த மாதம் மீண்டும் புதியதொரு தொழிலில் இணைந்தாலும் 2019 ஜனவரியில் தான் எனக்கான மடிக்கணினியை வாங்க இயலும். வேறு சாத்தியமான மார்க்கம் எதுவும் இல்லை. 

தற்போதைய மடிக்கணினியின் திரையை சரிசெய்வதாக இருந்தால் ரூபா 15,000 முதல் 20,000 வரை செலவாகலாம். மின்கலத்தை மாற்றுவதாக இருந்தால் இன்னும் ஒரு 10,000 ரூபா வரை மேலதிகமாக செலவாகும். Charger இல் இதுவரை சிக்கல் எதுவும் இல்லை. அதையும் மாற்ற நேர்ந்தால் அதற்கு ஒரு 15,000 ரூபா செலவாகும். ஆகவே புதிய மடிக்கணினியை வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 

2015 டிசம்பர் மாதம் எனது மடிக்கணினிக்கு இலங்கை ரூபா 25,000 மதிப்பில் Windows 10 Professional இயங்குதளத்தை கொள்வனவு செய்து நிறுவினேன். அதுவரை Windows 7 Professional இயங்குதளத்தின் அனுமதிப்பத்திரம் அற்ற (Unlicensed) இயங்குதளப் பதிப்பையே பயன்படுத்தி வந்தேன். நான் இப்போது புதிய மடிக்கணினி ஒன்றை வாங்குவதாக இருந்தால் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்ட மடிக்கணினி ஒன்றையே வாங்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு தடவை இயங்குதளத்திற்காக 25,000 ரூபாவைச் செலவு செய்ய நேரும். 

என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் எதையாவது செய்தாக வேண்டும். Tabஐ மட்டும் வைத்து சிகரம் இணையத்தளத்தை நடத்துவதென்பது சிரமமான காரியம். மேலும் Tab இல் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்ய முடியவில்லை. Struck ஆகி விடுகிறது. ஆதலால் மடிக்கணினியின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாகிறது. 

எனது மடிக்கணினியை நான் முறையாகப் பராமரிக்கவில்லை என்னும் உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரவு Chargeக்குப் போட்டால் காலையில் கூட அதனை சரி பார்க்க மறந்து விடுவதுண்டு. பல நாள் இது போல நடந்திருக்கிறது. சில நேரங்களில் எனது கோபத்தை மடிக்கணினி மீது கூட காட்டியிருக்கிறேன். ம்ம்.... கடந்து போனதைப் பற்றி இப்போது கவலைப்பட்டு என்ன பயன்? 

ஐந்து வருடங்கள் இந்த மடிக்கணினி எனக்காக உழைத்திருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்னுடன் இருக்குமோ அத்தனை காலமும் இதைக் கைவிடப்போவதில்லை. அதன் இறுதி மூச்சு வரையில் நானும் அதனுடனேயே இருக்க ஆசைப்படுகிறேன். இன்னும் ஒன்றல்ல, பல நூறு கணினிகளை நான் வாங்கினாலும் அதற்கெல்லாம் அச்சாரமாக இருக்கும் இந்த மடிக்கணினி எப்போதும் என்னுடனேயே இருக்கும். எனக்கு இன்னுமொரு மகளாக...

#கணினி #மடிக்கணினி #இணையம் #எண்ணங்கள் #நினைவுகள் #வலைத்தளம் #HP #HPNoteBook #LapTop #PC #Tab #Dell #Windos10 #SigaramINFO 

Monday 3 September 2018

சிகரம் பாரதி | 02.09.2018

இந்த வாழ்க்கை மிக அற்புதமானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நொடிக்கு நொடி ஆச்சரியங்களை அள்ளி வழங்கும் அற்புதம் இந்த வாழ்க்கை. நாம் என்னதான் நா தனியா இருந்துக்கறேன் என்று சொன்னாலும் நம்மை அறியாமல் நாம் யாரையாவது சார்ந்து தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் தனித்து வாழ்தல் என்பது சாத்தியமேயில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளும் என்பது போல் தான் அறைக் கதவை கதவை அடைத்துக் கொண்டால் இந்த உலகத்தில் நாம் தனியாக இருக்கிறோம் என்பதும். 

மறுபிறப்பு இருக்கிறதா, சாத்தியமா என்னும் கேள்விகளெல்லாம் அவசியமற்றவை. ஏனெனில் அதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே இருக்கும் இந்த பிறப்பில் என்ன செய்ய முடியுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது மறுஜென்மத்தின் மீது நம்பிக்கை வைப்பதைப் போன்று நிச்சயமற்றது. எனவே உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள் இன்றே, இப்போதே! 



சனிக்கிழமை 01.09.2018 அன்று என் மனைவி திலகவதிக்கு பிறந்த நாள். இருபத்தெட்டு வயதாகிறது. என்னை விட மூன்று மாதம் மூத்தவர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் கிருத்திகா செல்வி என்னும் பெண் குழந்தை. திருமணத்திற்குப் பிறகு மூன்றாவது பிறந்த தினம். அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நிறைவு செய்து விட்டோம். கையைக் கடிக்கும் பொருளாதார மந்த நிலை ஒரு காரணம். மனைவி வீட்டில் இருந்து வந்துட்டுப் போங்க என்று அழைப்பு வந்தது. இப்போது நாங்கள் எனது ஊரில் வசிப்பதாலும் ஒரு மணி நேர பயணம் தான் என்பதாலும் சென்று வந்தோம். 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வகையில் வெறியன் என்று கூட வைத்துக் கொள்ளலாம். கடந்த வருட பிக் பாஸில் ஓவியாவை மிகவும் பிடிக்கும். இந்த முறை ரித்விகா தான். பிக் பாஸ் வீட்டின் ஒலிபெருக்கியான டேனியல் இன்று வெளியேறி விட்டார். மகிழ்ச்சி. அடுத்து மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் வரிசையாக வெளியேற வேண்டும். மக்கள் தீர்ப்பும் பிக் பாஸின் எண்ணமும் எப்படி இருக்கிறதோ யாரறிவார்?

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியம். பன்னிரண்டு வயதில் இருந்தே என்னை அறியாமல் இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். வெற்றியை நோக்கிய இந்தப் பயணத்தில் கற்றதும் பெற்றதும் இழந்ததும் ஏராளம். ஒருமுறை இலங்கையின் பிரபல நாளிதழான வீரகேசரிக்கு உப ஆசிரியர் (Sub Editor) பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. எனக்கு அந்தப் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான் என்றாலும் என் சோம்பேறித்தனத்தினால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தேன். இப்போதும் கூட நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டதற்காக மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறேன். என் ஆர்வத்துக்கு மதிப்பளித்து எனக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தால் இன்று என் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்திருக்கும். கடந்து போன பேரூந்துக்குக் கை காட்டுவதில் என்ன பயன்?

மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஒவ்வொன்றாக உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 'சிகரம் பாரதி' வலைத்தளம் எனது தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் தாங்கி உங்களை நாடி வரும். கல்யாண வைபோகம் மற்றும் ஞாபகங்கள் என இரு தொடர் கதைகள் சிகரம் இணையத்தளத்தின் மூலம் வெளியிடவுள்ளேன். எனது பதினைந்தாவது வயதில் எழுதிய தொடர் கதை தான் ஞாபகங்கள். கல்யாண வைபோகம் இருபத்தாறு வயதில் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர். இடைநிறுத்தப்பட்ட தொடர் மீண்டும் வரவிருக்கிறது. சந்திப்போம், சிந்திப்போம் தோழர்களே!

#சிகரம்பாரதி #எண்ணங்கள் #பகிர்வு #மனம் #வலைத்தளம் #சிகரம் 

வாழ்க்கை அற்பமானதா?

தூறல்- 03 

'இந்த வாழ்க்கை , உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன. காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர். சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 

நமது பிறப்பையும் இறப்பையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை நம்மால் தீர்மானிக்க முடியும். 

Image Credits to its owner only


ஒரு கணம் இன்றைய உலகத்தை உங்கள் மனக்கண் முன் கொண்ண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். என்னுடைய 'தூறல்களைப்' போல மணம் வீசிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் வலைப் பூக்கள், உலகையே தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் இணையம், அந்த இணையத்தையும் மிஞ்சி விடத் துடிக்கும் கையடக்கத் தொலைபேசிகள், பிரம்மாண்டத் தொழிநுட்பங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் என்று எண்ணற்ற அதிசயங்கள் உங்கள் மனக் கண்ணில் விரியும். 

இவ்வளவு அற்புதங்களையும் உருவாக்கியது 'அற்பமான வாழ்க்கை' யை வாழ்ந்து கொன்ன்டிருக்கும் மனிதன் தான். எல்லாமே மனிதனின் முயற்சியால் உருவானது தானே? இதை யாராவது மறுக்கப் போகிறீர்களா? அல்லது இதற்குப் பின்னும் வாழ்க்கை அற்பமானதென்று யாராவது சொல்வீர்களா? அது மட்டுமல்ல, இது வரை உங்களில் யாராவது சொர்க்கத்தை நேரடியாகப் பார்த்ததுண்டா? அல்லது மரணத்திற்குப் பின் இன்னதுதான் நடக்கும் என்று உங்களால் நிச்சயித்துக் கூற முடியுமா? இல்லை! நிச்சயமில்லாத சொர்க்கத்திற்காக இருக்கின்ற வாழ்க்கையை நரகமாக்க வேண்டுமா? ஆகவே, இன்றே வாழ்க்கையை வாழுங்கள். அற்பமானதென்று சொல்லி விலகி ஓடாதீர்கள். வாழ்க்கை அற்பமானதல்ல - அற்புதமானது! 

பதிவின் தலைப்பு : வாழ்க்கை அற்பமானதா?

வலைப்பதிவு : தூறல்கள்

வெளியிட்ட திகதி : 08.09.2010 

#வாழ்க்கை #மனிதன் #எண்ணங்கள் #உணர்வுகள் #தூறல்கள் #வலைப்பதிவு #மீள் #தமிழ் #பகிர்வு #முயற்சி #சொர்க்கம் #நரகம் #சிகரம் 

Ads

My Blog List