Saturday 29 October 2016

விதியை நம்புகிறீர்களா?

தூறல்  - 02                  
  
'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 

அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு  விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்?

மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா? அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன? நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்!

பதிவின் தலைப்பு :  விதியை நம்புகிறீர்களா?
வலைப்பதிவு           : தூறல்கள்
வெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.

Tuesday 25 October 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் - 02

பேரன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம் நண்பா!

உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

நீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ செய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலகைக் காட்டு. குழந்தை புரிந்துகொள்ளட்டும். குழந்தையை அதன் போக்கிற்கு வளர விடு. சுதந்திரமாக முடிவெடுக் கற்றுக்கொடு. அதற்காகக் கட்டுப்பாடு இல்லாமலும் வளர்க்கச் சொல்லவில்லை. உன்னைப் போன்றே குழந்தையும் பல கதைகளைக் கேட்டு வளரட்டும். நாம் கூறும் கதைகளில் அவனே ராஜாவாக வாழட்டும்.

தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது வேறு. பழக்குவது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

முதல் கடிதத்தில் நீ, வா, போ என்று உரிமையுடன் அழைத்திருந்தாய். ஆனால், கடந்த கடிதத்தில் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு என்று பெரும் மரியாதையுடன் தொடங்கியிருக்கிறாய். இந்த மரியாதை எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. சரி, அதை விடுவோம். நாம் இப்பொழுதே பழகத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் அதற்குள் பிரிவினைப் பற்றி கவலைப் படுகிறாய், அதற்கு அவசியமே இல்லை என்று கருதுகிறேன் நான். 

'கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் 
தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு'

என்ற நாலடியார் பாடலைப் போன்றே நம் நட்பும் வளரும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதில் உனக்கு அணுவளவும் ஐயம் வேண்டாம் நண்பா.

வரவர எழுத்தின் தரம் தாழ்ந்து கொண்டு வருவதாக வருத்தப்பட்டாய். ஒரு வரியை உடைத்துப் போட்டாலே அதுதான் கவிதை என்கிறார்கள். நாமும் தொடக்கத்தில் அப்படித்தான் எழுதினோம் என்பதை மறக்கக் கூடாது நண்பா. மனிதன் கூட ஒரு காலத்தில் ஆடையின்றி சுற்றித்தான் இன்றைய நாகரீகத்தினை கற்றுக்கொண்டான். எழுத்தும் அப்படித்தான். தொடக்கத்தில் அது அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். வெளிப்படுத்த வெளிப்படுத்தத் தான் அது தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டு சிறப்பாக வெளிப்படும். ஆதலால் அதை பற்றி நீ கவலைப் படாதே. எதுவுமே எழுதாமல் இருப்பதற்குப் பதில் முகப்புப் புத்தகத்திலாவது ஏதாவது எழுதுகிறார்களே, அதுவரை நாம் மகிழ்ச்சி அடையவே வேண்டும். என்னைக் கேட்டால் ஓட இயலாத போது நடக்க வேண்டும். நடக்க இயலாத போது நகர வேண்டும். நகர இயலாத போது உருள வேண்டும். உருள இயலாத போது முயற்சிக்க வேண்டும். ஆதலால் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். எழுதுபவர்கள் தம் எழுத்தினை மேம்படுத்திக் கொண்டிருப்பது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம் எழுதுவதே உலகின் ஆகச்சிறந்த இலக்கியம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் தமிழ் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு சாரு நிவேதிதா. அவரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாய். மிகச் சிறந்த எழுத்தாளர். ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப் போய் விட்டார். அவர் கதை நமக்கு வேண்டாம்.

வேலைப்பளு வரவர அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆதலால்,வென்வேல் சென்னியின் வேகம் வானவல்லியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பருக்குள் சென்னி முதல் பாகத்தை முடித்ததுவிடுவேன் என்று நம்புகிறேன். இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்னி மொத்தமாக வெளியிடப்படும்.

நீ பத்திரமாக இரு. எந்தச் சூழலிலும் எழுதுவதை நிறுத்தாதே. தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. மற்றவர்கள் வாங்கும் லைக்குகளை எண்ணி மயங்காதே... அது உனது வளர்ச்சியை பாதிக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நமது தாத்தா கூறியிருக்கிறார். ஆதலால் எந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பெரியதாகவே இருக்கட்டும். வெற்றி உனதாகட்டும்.

அன்புடன்...
சி.வெற்றிவேல்.

  _________________________________________________________________________________

கடிதத்திற்கு நன்றி நண்பா. எனது பதில் கடிதம் விரைவில்...

இக்கடிதத்தை நண்பர் வெற்றிவேல் அவர்களின் தளத்தில் காண:


Thursday 6 October 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல்.

நண்பா இப்படியும் ஒரு நண்பனா என்று சிந்திக்க வைத்த ஒரு நண்பன் நீ. நம் நட்பு முகம் பாராது எழுத்தைப் பார்த்து வந்த நட்பு. எழுத்துக்களைப் பற்றிய விடயங்களைப் பகிர ஆரம்பித்து இப்போது தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நீண்டிருக்கிறது எம் நட்பு. வைபரின் புண்ணியத்தில் முகம் பார்த்துக் கொண்டோம். வாட்ஸப்பின் உபயத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இணையம் தந்த இணையற்ற நட்பு உன் நட்புதான். உன்னைப் போன்றே இலங்கைக்குள் எனக்குக்  கிடைத்த நட்புதான் 'அதிசயா'. நினைவிருக்கும் என நம்புகிறேன். அவரையும் இன்னும் நேரில் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. நான் தமிழகம் வரும் வேளை முதலில் உன்னைத்தான் சந்திக்க விரும்புகிறேன். இவ்வளவு நெருக்கமாய் நம் நட்பு அமையக் காரணம் எது? தெரியவில்லை. ஆனால் பிரிவொன்று நேர்ந்துவிடக் கூடாது என்பது மட்டுமே என் பிரார்த்தனை.

இல்வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அண்மைக் காலங்களில் தங்கையுடன் உரையாடினாயல்லவா? கல்விப் பிண்ணனி குறைவாக இருந்தாலும் குணத்தில் நிறைவாக இருக்கிறார். மகிழ்ச்சி. இப்போது வானவல்லியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். செங்குவீரனை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறேன். வானவல்லியுடனான பயண அனுபவத்தை உன்னோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். வானவல்லி எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாகவே இருக்கிறது. சங்ககால வரலாற்றை கட்டுரை வடிவில் வாசித்து நினைவிலிருத்திக் கொள்வது கடினம். மேலும் எல்லோரும் வரலாற்று ஆய்வுகளை வாசிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் வரலாற்றுப் புதினம் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சிறுவயதில் பல ராஜா கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். ஆகவே எதிர்காலத்தில் சங்ககால வரலாற்றுக்கான ஆதாரமாக வானவல்லி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வென்வேல்சென்னி சிறப்பாக அமைய என் முன் கூட்டிய வாழ்த்துக்கள். வானவல்லிக்கு முன்னைய காலகட்டத்தில் நிகழும் கதை என்பது இன்னும் எதிர்பார்ப்புக்குரியதாகிறது. வானதி பதிப்பகத்தில் வானவல்லி வெளியானது புதினத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும் நண்பனின் வானவல்லிக்கு முன்னால் நான்காயிரம் ரூபாயெல்லாம் ஒரு பொருட்டல்ல. வென்வேல் சென்னி பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் நிச்சயம் வாங்குவேன். ஏனெனில் என் நண்பன் நீ!  புதினங்களை வாசித்து நாளாகிவிட்டது. என் வாசிப்புத் திறனை வானவல்லிக்காய் தூசு தட்டி எழுப்பியிருக்கிறேன்.



நம் நட்பு வலைத்தளம் பரிசளித்தது. உன் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் வென்வேல் சென்னியின் எழுத்துப் பணியையும் முன்னெடுத்துச் செல்கிறாய். ஆயினும் நம் நட்பை பரிசளித்த வலைத்தளத்தை மறந்ததேனோ? பேஸ்புக்கில் எழுதுவதை பிரதி செய்து போட்டேனும் வலைத்தளத்தை தொடரவும். இடுகையின் அளவு ஒரு பொருட்டல்ல. மேலும் நீ தனி இணையத்தளத்தை தொடங்கியதற்குப் பின் எழுதுவதை நிறுத்தியது ஏன்? மீண்டும் வலைத்தளத்தில் வெற்றியைக் காண ஆவலுடன் உள்ளேன். பேஸ்புக், வைபர், வாட்ஸப் எனப்பலவும் வந்த பின்னர் வலைத்தளங்களில் எழுதும் நம்மவரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். காரணம் தரமற்ற எழுத்துக்கள் சமூகத்தை ஆக்கிரமித்துவிடும். பத்து சொற்கள் கொண்ட வசனத்தை நான்கு வரிகளுக்கு உடைத்துப் போட்டால் அதுதான் கவிதையென நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆயிரம் லைக்குகளும் (விருப்பம்) பலநூறு கருத்துக்களும் வேறு. இந்த ஆபத்தான நிலைக்கு மேலும் வலு சேர்ப்பவர்களாக நாமும் இருந்துவிட வேண்டாமே? தமிழ் வலையுலகை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடப்பாடு நமக்கும் உண்டு என்பதை மறவாதே.

நிற்க உன் தொழில் நிலவரங்கள் எப்படி? வரவு - செலவு நிலை எப்படி? வீட்டாரை நலம் விசாரித்ததாகச் சொல்லவும். விரைவில் இருபத்தோராம் நூற்றாண்டின் வானவல்லியைக் கரம்பிடித்து நமது வருத்தப்படாத திருமணமான வாலிபர் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். அண்டை மாநிலத்தில் சென்று தொழில் செய்கிறாய். அங்குள்ள சூழல் எவ்வாறு இருக்கிறது? ஓய்வு நேரம் கிடைக்கிறதா? சக பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? தமிழக தொழில் சூழலுக்கும் கர்நாடக தொழில் சூழலுக்குமிடையில் ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளனவா? கர்நாடகத்தில் தமிழ் எழுத்துக்கான களம் இருக்கிறதா? அங்குள்ள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?

என் கடிதம் கேள்விகளால் நிரம்பி வழிகிறது என்று நினைக்கிறேன். முடியுமானவற்றுக்கு பதில் தரவும். விரைவில் மற்றுமொரு நேர்காணலை உன்னுடன் நடத்த விரும்புகிறேன். முதல் நேர்காணல் வானவல்லியுடன் மட்டும் தொடர்பு பட்டதாக இருந்தது. இரண்டாவது நேர்காணல் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

மேலும் இக்கடிதம் முழுவதையும் கைப்பேசியினூடாகவே எழுதினேன். பதில் கடிதம் கண்டதும் அடுத்த கடிதத்தில் இன்னும் பேசலாம்.

இப்படிக்கு
அன்புடன்
சிகரம்பாரதி.

Wednesday 5 October 2016

'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!
'வானவல்லி' நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். 'வானவல்லி'க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். 'ஆகட்டும்' என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை 'வானவல்லி' வெளியானதும் தருகிறேன் என்று கூறினார்.

அத்துடன் 'நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.' என்று ஆலோசனையும் கொடுத்தார்.

தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதோ இப்போது 'வானவல்லி' என் வாசிப்பில்... எனது நேர்காணலுக்கு நண்பர் வெற்றி பதில் அனுப்பி மின்னஞ்சலில் காத்துக் கிடந்தது. தற்போது உங்கள் பார்வைக்கு... நண்பர் வெற்றிக்கு மிக்க நன்றி!



* "வானவல்லி" எந்தக்காலகட்டம் முதல் எந்தக் காலகட்டம் வரை கூறுகிறது?

---> வானவல்லி கி.மு இரண்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. சரியாகக் கூற வேண்டும் என்றால் கி.மு 175 ல் கரிகாலன் எதிரிகளால் சிறைவைக்கப்பட்ட பிறகு கதை தொடங்கும். அதன் பிறகு கரிகாலன் எதிரிகளின் சிறையிலிருந்து எப்படி மீள்கிறான். வெண்ணிப் போரில் அனைவரையும் தோற்கடித்து அவனது அரியாசனத்தை மீட்ட பிறகு, இமயம் வரை படையெடுத்துச் செல்லும் சுமார் பத்து வருட காலமே வானவல்லியின் கால கட்டம்.

* புதினத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவையா?

---> புதினம் என்றாலே புனைவு என்று தான் பொருள். அப்படியிருக்கையில் வரலாற்றுப் புதினத்தில் வரும் அனைத்து நிகழ்வுகளும் எப்படி உண்மையாக இருக்கும். கரிகாலனைப் பற்றிய சரித்திரத் தகவல்கள் அனைத்தும் உண்மை. ஆனால், அந்த நிகழ்வுகள் எப்படி நடந்திருக்கும் என்பதில் எனது கற்பனையைப் புகுத்தி நாவலை புனைந்திருக்கிறேன். ஆனாலும், புதினத்தை வாசித்தவர்களிடம் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சோழ இளவரசன் வளவனை அவனது எதிரிகள் சிறை பிடித்து மாளிகையில் எரித்து உயிரோடு எரிக்க முயன்றார்கள். அப்போது அவனது கால்கள் தீயில் வெந்து கருகியது. ஆதலால் தான் அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். இது வரலாற்று நிகழ்வு. இந்த சிறைபிடித்து, அவன் தப்பித்த முறை என நான் எழுதியவை அனைத்தும் எனது கற்பனையே.

* வரலாற்றுப் புதினம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் எப்படி வந்தது?

---> இந்தக் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பா. ஆனால், எனக்குத் தான் சரியான பதிலை எப்படி அளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு சரித்திரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் சிறு வயதில் என்னைத் தோளில் போட்டுக்கொண்டு எனது தாத்தா கூறிய ராசா கதைகள் கூட காரணமாக இருக்கலாம். சோழர்களின் வீரம் எனக்கு மிகவும் பிடிக்கும். சோழ நாட்டான் நான் என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

* "வானவல்லி" பொன்னியின் செல்வன் போன்ற ஏதேனும் ஒரு வரலாற்றுப் புதினத்தின் தொடர்ச்சியா?

---> நிச்சயமாக இல்லை. தமிழ் வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் பிற்கால சோழர்களைப் பற்றி பல புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராஜ ராஜன் மற்றும் இராஜேந்திரன். ஆனால், முற்கால சோழர்களான கரிகாலன், இளஞ்சேட் சென்னி, கிள்ளி வளவன், செம்பியன் எனும் சிபிச் சோழன் போன்ற முற்கால மன்னர்களைப் பற்றிய வரலாற்றுப் புதினங்கள் மிகவும் சொற்பம். அந்த சொற்பத்தில் ஒன்று வானவல்லி. வானவல்லிக்கு முந்தைய கதையை இப்போது நான் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பெயர் வென்வேல்  சென்னி. கரிகாலனின் தந்தையின் வரலாறு. எதிர்காலத்தில் கூறப்படலாம் வென்வேல் சென்னியின் தொடர்ச்சி வானவல்லி என்று.

* "வானவல்லி"யின் காலகட்டத்தை குறிப்பிடும் வரலாற்றுப் புதினங்கள் ஏதேனும் உள்ளனவா?

---> ஒரே ஒரு புதினம் மட்டும் இருக்கிறது. சாண்டில்யன் அவர்களின் யவன ராணி. அதுவும் கரிகாலனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் கரிகாலன் எனும் ஒரே தளத்தை அடிப்படையாகக் கொண்டது. யவனராணி கரிகாலனின் வெண்ணிப்போர் வரை முடிந்துவிடும். வானவல்லி கரிகாலனின் இலங்கைப் போர், காவேரிக்கு அணை எடுத்தது, அவனது இமய போர் வரைத் தொடரும்.

* இது உங்கள் வயதுக்கு மீறிய முயற்சி என்று சொன்னால்?

---> வயதுக்கு மீறிய முயற்சி என்று எதுவுமே இல்லை நண்பா. அனைத்துமே நமது முயற்சியில் தான் இருக்கிறது. என்னைக் கேட்டால் இதுவே தாமதம் என்றுதான் கூறுவேன்.

* கள ஆய்வு செய்திருக்கிறீர்களா?

---> செய்திருக்கிறேன். உறைந்தை (உறையூர்), புகார், கல்லணை என்று திரிந்திருக்கிறேன். 2200 வருட கால மாற்றத்தால் அனைத்தும் மாறிக் கிடக்கிறது. முக்கொம்பிலிருந்து கல்லணை வரை நடந்தே சென்றிருக்கிறேன். பட்டினப்பாலை கூறும் புகாரின் வளத்தைக் கேட்டு எதுவுமே இல்லாத புகார் கடற்கரையில் நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன்.

* இதில் உங்களுக்கு உதவி செய்தவர்களைப் பற்றி?

---> தொடக்கத்தில் நிறைய நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். உதவியவர்கள் என்று எடுத்துக் கொண்டாள் நண்பர் திரு.சுந்தர் கிருஷ்ணன் மற்றும் சோழகங்கம் ஆசிரியர் சக்தி ஸ்ரீ  அவர்களின் உதவி அளப்பரியது. சுந்தர் அண்ணன்தான் பிழை திருத்தம் செய்ததில் இருந்து பதிப்பாளரிடம் பேசி புத்தகம் வெளியாகும் வரை உதவி செய்தவர். வரலாற்றுத் தகவல்களில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் தெளிவு படுத்தியவர் சக்தி ஸ்ரீ. இந்த இருவரும் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். இருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

* யார் இந்த "வானவல்லி"? - உண்மையை சொல்லுங்க.

---> வானவல்லி என்பவள் சோழப் படைத் தலைவனின் காதலி. வேளக்காரப் படைத் தலைவனின் தங்கை. கரிகாலருக்கு அக்கா. மாற்றத்தை வானவல்லி படிக்கும்போது தெரிந்துகொள்ளவுங்கள்.

* புத்தக வெளியீட்டில் இலாபமீட்ட முடியுமா?

---> இது பதிப்பகத்தாரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

* புதிதாக நூல் வெளியிட விரும்பும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரை?

---> முடிந்த வரை பதிப்பகம் வழியாக வெளியிடுவது சிறந்தது. அவர்களால் மட்டுமே வாசகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்க இயலும்.

* "வானவல்லி"க்கு உங்கள் வீட்டாரின் பிரதிபலிப்பு என்ன?

---> வானவல்லி எழுதத் தொடங்கிய காலத்தில் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேலைக்குச் செல்லாமல் மணிக் கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து உணவில்லாமல் எழுதிக் கொண்டிருந்தால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்? போகப் போக எனது உணர்வுகளை வீட்டில் புரிந்துகொண்டார்கள். வானவல்லி வெளியான போது என்னை விட வீட்டில் தான் அதிக மகிழ்ச்சி. இப்போது எழுதுகிறேன் என்று கூறினாலே அவர்கள் என்னை தொந்தரவு செய்வதில்லை.

* வலைத்தளத்தில் "வானவல்லி" இடை நிறுத்தப்படக் காரணம்?

---> நான் எழுதியதை பலர் அவர்களின் தளத்தில் வெளியிட்டு அவர்களின் பெயரைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தகம் வெளியாகும் நேரத்தில் அவர்களால் எந்த இடையூறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் பாதியில் நிறுத்தி விட்டேன்.

* "வானவல்லி"க்காக நீங்கள்   சந்தித்த சவால்கள் என்ன?

----> இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதைக் களம் என்பதால் அக்காலம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை முறை, அரசியல், போர், போரியல் கருவிகள் ஆகியவற்றை அறிவதில் பெருத்த சவால்களை சந்தித்தேன். வானவல்லி கதைக்களங்களை நேரில் பார்க்க புகார், கல்லணை, உறையூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். ஆனால், கால மாற்றத்தில் பல மாற்றங்களை சந்தித்து வரலாற்றுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனும் ரீதியில் நின்றுகொண்டிருந்தன. அப்பகுதிகளைக் காணும்போது நானாகவே  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயணித்து இந்தப் பகுதிகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன். தினமும் தொடர்ந்து எழுதியதால் எப்படி இரண்டாயிரம் பக்கங்களைக் கடந்தேன் என்று தெரியவில்லை. தகவல்களை திரட்டுவது தான் பெருத்த சவால்களாக இருந்தது. தகவல்கள் கிடைத்ததும், அதை கதையுடன் இணைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

                                                          **********
நண்பர் வெற்றிவேல் தற்போது மற்றுமொரு புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அது தொடர்பான நேர்காணலும் நமது தளத்தில் வெளியாகும். காத்திருங்கள்!  

Tuesday 4 October 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"
"நீ இல்லாம எப்படி ஜெய்?"
"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."
"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" "..................................."
"சரி விடு. நா பாத்துக்குறேன்...."
"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."
"சரி ஜெய்" தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.
"வாழ்த்துக்கள்டா மாப்ள..."
"என்ன சுசி நீயும்.....?"
"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"
"ம்....... நா எதுக்கு........"
"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."
"சரிடா."
"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

பதிவின் தலைப்பு : கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01
வலைப்பதிவு           : சிகரம்
வெளியிட்ட திகதி : 05.07.2012, வியாழன். 

Saturday 1 October 2016

உலகம் அழியப் போகிறதா?

தூறல் 1

2012 டிசம்பர் 21  ஆம் திகதி உலகம் அழியும் என்று கணிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மத்திய அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் காணப் பட்ட 'மாயன் நாட்காட்டி'இலேயே மேற்படி உலக அழிவுக்கான திகதி குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

இப்படிதான் 2000  ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சிலர் வதந்தியைப் பரப்பினர் . ஆனால் அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல.இந்த 'உலக அழிவை எதிர்வுகூறும்' மாயன் நாட்காட்டியை உருவாக்கிய மாயன்  நாகரிகம் இப்போது முற்றாக அழிந்து விட்டதாம் . தமது சமூகத்தின் அழிவையே கணிக்க முடியாத இவர்களால் உலக அழிவை எப்படி எதிர்வு கூற முடியும் என்று சிலர் வினவுகிறார்கள். விஞ்ஞானிகளே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தமது மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்கிறார்களாம் . 

இந்தச் செய்தி வெளியானதில் இருந்து செவ்வாய்க்  கிரகத்திலும் நிலவிலும் காணி விற்பனை மிக வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருகிறது. 'என்னது? செவ்வாயில் காணி விற்பனையா?' என்று அதிசயப் படுகிறீர்களா?  இதென்ன பிரமாதம்,செவ்வாய்க் கிரகத்தில் நான் வாங்கிய காணியில் புதிதாக ஒரு வீடு கட்டி இருக்கிறேன். அடுத்த வாரம் பால் காய்ச்சப் போகிறேன். முகவரி சொல்றேன், அவசியம் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. 
சிகரம் பாரதி ,இல:100  , செவ்வாய் குறுக்குச் சந்து ( பேருந்துநிலையம் அருகில்) , செவ்வாய். வருவீங்கல்ல?!?!?!?!?
______________________________________________________________________
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 'சிகரம் பாரதி' ஆகிய எனது வலைத்தளப் பதிவுகளை ஒழுங்கு முறையில் முகாமை செய்து கொள்வதற்காகவே இவ்வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் எனது ஆரம்பகாலப் பதிவுகளை வரிசைக் கிரமத்தில் வெளியிடுகிறேன். எனது ஏனைய வலைத்தளங்களில் உள்ள அனைத்துப் பதிவுகளும் வெளியிட்டு முடித்த பின்னர் இந்த வலையினூடாகவே நாம் தொடரலாம்.

பதிவின் தலைப்பு :  உலகம் அழியப் போகிறதா?
வலைப்பதிவு          : தூறல்கள் 
வெளியிட்ட திகதி : 03.09.2010 , வெள்ளிக்கிழமை.

Ads

My Blog List