Friday 2 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 25.10.2018

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வேதனமாக 1000வை வழங்கக் கோரி நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 24.10.2018 திகதியன்று 'குழு 24' எனப்படும் #Team24 இனால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

அரசியல் பேதங்கள் இன்றி ஒன்றிணைந்த நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இந்தப் போராட்டங்கள் இத்துடன் முடிந்து போகக் கூடாது. மலையக மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இப்போராட்டம் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.



சமூக அக்கறையுள்ள, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அரசியல் மாற்றமொன்றுக்குத் தயாராக வேண்டும். காலம் காலமாக அரசியல் செய்து நம்மை ஏமாற்றிப் பிழைப்பவர்களை புறந்தள்ளி புதியவர்களை நம்மவர்களை அரசியல் அதிகாரத்தில் அமரவைக்க வேண்டும்.

2019 ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறும். இதுவரை நம்மை ஆண்ட அரசியல் வாதிகளுக்கு ஓய்வளிப்போம். புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு, படித்தவர்களுக்கு வாக்களிப்போம். நம் சமூகம் உருவாக்கும் இந்த மாற்றம் முழு உலகுக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுப் போராட்டத்தில் ஒன்றிணைந்த நாம் மலையகத்துக்கான புதிய அரசியல் மாற்றத்திலும் ஒன்றிணைய வேண்டும். இது நமது அதிகாரம். நமக்கான அதிகாரம். நம்மை நாமே ஆள்வோம், நமது அதிகாரம், நமது உரிமை!



பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளமாக ரூ 1000 கோரும் நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் அடிப்படை சம்பளமாக ரூ 600 மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளன. அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. 



ஆனால் எல்லா தொழிலாளியும் அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை பெறுவது சாத்தியம் இல்லை. ஆகவே இலங்கை அரசு இதில் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும். வருடாந்த சம்பள அதிகரிப்புடன் மாதாந்த சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும்!

No comments :

Post a Comment

Ads

My Blog List