Tuesday 4 September 2018

என் மடிக்கணினிக்கு அகவை ஐந்து (சிகரம் பாரதி | 03.09.2018)

2013.09.01 அன்று என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்த மடிக்கணினியைக் கொள்வனவு செய்தேன். அதுநாள் வரை எனது வலைத்தளப் பணிகள் மற்றும் இதர இணைய தேவைகளுக்கு இணைய உலாவி நிலையங்களையே (Internet Browsing Centre) நான் நாட வேண்டியிருந்தது. கையில் பணம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும். எல்லா நேரங்களிலும் அங்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் நமது எல்லாத் தேவைகளையும் அந்த நிலையங்களால் பூர்த்தி செய்யவும் முடியாது. 

ஆகவே தான் தவணைக் கொடுப்பனவு முறையில் எனது கனவு மடிக்கணினியை கொள்வனவு செய்தேன். HP Note Book 2000 என்பது தான் என்னுடைய மடிக்கணினி. இலங்கைப் பெறுமதியில் ரூபா 85,000 மதிப்புக்கு கொள்வனவு செய்தேன். முதலில் ரூபா 25,000 உம் பின்னர் மாதாந்தம் 5,000 ரூபா வீதம் பன்னிரண்டு மாதங்களுக்கு கொடுப்பனவு செய்தேன். வட்டிப் பணம் விசேட சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்டது. Etisalat Dongle ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். 



ஐந்து வருடங்கள் எனக்காக உழைத்த என் மடிக்கணினி இப்போது ஓய்வெடுக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக திரையில் வர்ணங்கள் தெளிவாக இல்லை. குறிப்பாக சிவப்பு நிறம் ஆரஞ்சு நிறம் போலத் தோற்றமளிக்கிறது. இதனால் முக்கியப் பணிகளை மடிக்கணினியில் ஆற்ற முடியவில்லை. அடுத்து அண்மைக்காலமாக மின்கலம் செயலிழந்து காணப்படுகிறது. அதன் காரணமாக நேரடி மின் இணைப்பில் மட்டுமே மடிக்கணினியை இயக்க முடியும். மடிக்கணினி எப்போது மரணத்தைத் தழுவும் எனக் கணிக்க முடியவில்லை. 

அண்மையில் Singer DUO 2 in 1 Note Book ஐ கொள்வனவு செய்திருந்தேன். இலங்கை மதிப்பில் ரூபா 30,000 பெறுமதி. Tab ஆகவும் PC ஆகவும் இதனை உபயோகிக்க முடியும். ஆனால் கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் இதில் செய்ய முடியாது. உள்ளக நினைவகத் திறன் 32GB மட்டுமே. மடிக்கணினியின் உள்ளக நினைவகத் திறன் 500GB. மடிக்கணினியின் திரை 15.2 அங்குலம். Tab இன் திரை 10.1 அங்குலம். மடிக்கணினியில் தொடுதிரை (Touch Screen) கிடையாது. Tab இல் தொடுதிரை உண்டு. 

இரண்டிலும் தனியான இலக்க விசைகள் (Dedicated Number Keys) கிடையாது என்பது எனக்கு எப்போதுமே நெருடலான விடயமாக இருந்து வந்திருக்கிறது. மேலும் இப்போது புதிய மடிக்கணினியைக் கொள்வனவு செய்வதற்கான தேவையும் எழுந்திருக்கிறது. ஆனால் கையில் பணம் இல்லை. கடந்த மூன்று மாதமாக தொழிலும் இல்லை. இந்த மாதம் மீண்டும் புதியதொரு தொழிலில் இணைந்தாலும் 2019 ஜனவரியில் தான் எனக்கான மடிக்கணினியை வாங்க இயலும். வேறு சாத்தியமான மார்க்கம் எதுவும் இல்லை. 

தற்போதைய மடிக்கணினியின் திரையை சரிசெய்வதாக இருந்தால் ரூபா 15,000 முதல் 20,000 வரை செலவாகலாம். மின்கலத்தை மாற்றுவதாக இருந்தால் இன்னும் ஒரு 10,000 ரூபா வரை மேலதிகமாக செலவாகும். Charger இல் இதுவரை சிக்கல் எதுவும் இல்லை. அதையும் மாற்ற நேர்ந்தால் அதற்கு ஒரு 15,000 ரூபா செலவாகும். ஆகவே புதிய மடிக்கணினியை வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 

2015 டிசம்பர் மாதம் எனது மடிக்கணினிக்கு இலங்கை ரூபா 25,000 மதிப்பில் Windows 10 Professional இயங்குதளத்தை கொள்வனவு செய்து நிறுவினேன். அதுவரை Windows 7 Professional இயங்குதளத்தின் அனுமதிப்பத்திரம் அற்ற (Unlicensed) இயங்குதளப் பதிப்பையே பயன்படுத்தி வந்தேன். நான் இப்போது புதிய மடிக்கணினி ஒன்றை வாங்குவதாக இருந்தால் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்ட மடிக்கணினி ஒன்றையே வாங்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு தடவை இயங்குதளத்திற்காக 25,000 ரூபாவைச் செலவு செய்ய நேரும். 

என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் எதையாவது செய்தாக வேண்டும். Tabஐ மட்டும் வைத்து சிகரம் இணையத்தளத்தை நடத்துவதென்பது சிரமமான காரியம். மேலும் Tab இல் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்ய முடியவில்லை. Struck ஆகி விடுகிறது. ஆதலால் மடிக்கணினியின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாகிறது. 

எனது மடிக்கணினியை நான் முறையாகப் பராமரிக்கவில்லை என்னும் உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரவு Chargeக்குப் போட்டால் காலையில் கூட அதனை சரி பார்க்க மறந்து விடுவதுண்டு. பல நாள் இது போல நடந்திருக்கிறது. சில நேரங்களில் எனது கோபத்தை மடிக்கணினி மீது கூட காட்டியிருக்கிறேன். ம்ம்.... கடந்து போனதைப் பற்றி இப்போது கவலைப்பட்டு என்ன பயன்? 

ஐந்து வருடங்கள் இந்த மடிக்கணினி எனக்காக உழைத்திருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்னுடன் இருக்குமோ அத்தனை காலமும் இதைக் கைவிடப்போவதில்லை. அதன் இறுதி மூச்சு வரையில் நானும் அதனுடனேயே இருக்க ஆசைப்படுகிறேன். இன்னும் ஒன்றல்ல, பல நூறு கணினிகளை நான் வாங்கினாலும் அதற்கெல்லாம் அச்சாரமாக இருக்கும் இந்த மடிக்கணினி எப்போதும் என்னுடனேயே இருக்கும். எனக்கு இன்னுமொரு மகளாக...

#கணினி #மடிக்கணினி #இணையம் #எண்ணங்கள் #நினைவுகள் #வலைத்தளம் #HP #HPNoteBook #LapTop #PC #Tab #Dell #Windos10 #SigaramINFO 

No comments :

Post a Comment

Ads

My Blog List