Thursday 24 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09

பகுதி - 09

அன்றைய இரவு இளமை தனது விளையாட்டை என்னில் காட்டத் துவங்கியிருந்தது. திவ்யாவைப் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் என் உறக்கத்தை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பெயரைத் தெரிந்துகொண்டதும் அவளுடன் ஓரிரு நிமிடங்கள் உரையாடக் கிடைத்ததும் என் மனதுக்குள் குதூகலத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. 'அட, இதுதான் காதலா......? தெரியாமப் போச்சே...........!'. இத்தனை மகிழ்ச்சிக்குள்ளும் கொஞ்சம் சோகமும் இழையோடிக் கொண்டுதான் இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, திவ்யா பதிலேதும் சொல்லாமல் போனது. அடுத்தது, நாளை திவ்யாவிடம் பேசக் கூடாது என்று நண்பர்கள் சொன்னது. ஒருவேளை திவ்யாவுக்கு என்மேல் விருப்பம் இருந்து நாளைக் காலை என்னைக் காணாமல் தவித்தால் அவளுடைய பரீட்சை பாதிக்கப்படுமே என்பது தான் என் சிந்தனையாக இருந்தது. ஆனால் நண்பர்களை மீறி செயற்படவும் முடியாது. மகிழ்ச்சி கரைந்து போய் சிந்தனை மட்டுமே எஞ்சியிருந்தது. 

இரவு எத்தனை மணிக்கு உறங்கிப் போனேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஆறுமணிக்கெல்லாம் எழுந்துகொண்டேன். விடிய விடிய பரீட்சைக்குத் தயாரான மாணவனைப் போல் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. உடனே எழுந்து அம்மாவின் தேநீரைப் பருகிவிட்டு அவசர அவசரமாகத் தயாராகி அதே இடத்தைச் சென்றடைந்தேன். அந்த இடத்திலிருந்த மரத்தடிக்குப் பின்னால் நாங்கள் ஒளிந்து கொண்டோம்.

பேரூந்தை விட்டு இறங்கிய திவ்யா சற்று வேகமாக நடந்து, பின் நடையில் ஒரு தளர்வைக் காட்டினாள். என் வரவை எதிர்பார்க்கிறாள் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனால் நிற்கவோ திரும்பிப் பார்க்கவோ இல்லை என்பது ஏமாற்றமளித்தது. அவள் பாடசாலைக்குள் போனதும் சங்கம் பேச ஆரம்பித்தது.

"என்னடா அவ பாட்டுக்கு போறா?" - முரளி 

"அவளுக்கு உன் மேல லவ் இல்லடா........" - விசு 

"இல்ல.. இருக்குடா...." - சுசி 

"எப்படி?" - முரளி 

"பகல் அவ திரும்பிப் போகும் போது பாரேன்" - சுசி 

"விளையாடாத சுசி...." - நான் 

"பார்டா........ மாப்பிள்ளைக்கு கோவமெல்லாம் வருது..........." - முரளி 

"இப்பவே காதலி மேல அவளோ பாசமா?" - விசு 

"சும்மா இருங்கடா.... விளையாட்டு வினையாகப் போகுது.........." - நான் 

"என்ன ஆனாலும் நாங்க இருக்கோம் ஜெய். பாத்துக்கலாம்." - விசு 

"சரிடா....." - நான் 

அத்தோடு எங்கள் காலை நேரச் சந்திப்பு முடிந்து போனது. அதன் பின் எல்லோரும் அவரவர் வழியில் பிரிந்து போக, மனம் உடன் துணைவர வீடு நோக்கி சிந்தனைகளுடன் நடைபோட்டேன் அன்று மாலை நடக்கப் போவதை சற்றும் அறியாமல்..............


                                                   *********************************


"ம்ம்............ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"

திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.  


"இல்ல" - மனம் குழப்பத்திலிருந்தாலும் குரலில் தீர்க்கம் சேர்த்து சொன்னேன். 

"ஏன்?"

"உன்னப் பத்தி ஒரு தகவலும் இல்லாம இருந்ததாலயும் பெத்தவங்களோட ஆசைய  நிறைவேத்தணும்னு நினைச்சதாலயும் தான் நந்தினிய கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன். இது விருப்பத்தோட எடுத்த முடிவு இல்ல. கட்டாயத்தின் பேர்ல எடுத்த முடிவு. ஆனா இப்போ உன்னை திரும்பவும் சந்திக்கக் கிடைச்சிருக்கு. அதனால நந்தினிய ஏத்துக்க எனக்கு முடியாது திவ்யா......"

"..............................."

"என்ன திவ்யா......? பேசாம இருக்க?"

"நந்தினிய வேணான்னு சொல்லப் போறீங்களா?"

"ஆமா...."

"இது நியாயமா?"

"ஏன்?"

"நிச்சயம் பண்ணிட்டு......."

"இப்பவே நாகரீகமா வேணான்னு சொல்லிரணும். இல்லாட்டி ஏதாவதொரு சந்தர்ப்பத்துல நானே உளறிடுவேன். அப்போ எல்லாருக்கும் மனக்கஷ்டம் ஆயிரும்."

"........................"

"திவ்யா....."

"இப்போ மட்டும்.........?"

"கஷ்டமாத்தான் இருக்கும். புரிஞ்சிப்பாங்கன்னு நெனைக்கிறேன்."

"நடக்குமா?"

"நம்பிக்கை இல்லையா"

".................."

"திவ்யா............"

"...................."

"என்ன..........? நம்பிக்கை இல்லையா?"

"பார்க்கலாம்.............."

"ஏன் அப்படி சொல்ற?"

"என்ன நடக்குதுன்னு பாக்கத்தானே வேணும்?"

"திவ்யா............"

"சொல்லுங்க........"

"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற.......?" - அவள் சொல்லப் போகும் பதில் எதுவாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விட்டிருந்தது. அவளின் பதிலை எதிர்பார்த்து கேள்விக்குறியோடு அவள் முகத்தை நோக்கினேன்....

No comments :

Post a Comment

Ads

My Blog List